Friday, October 18, 2013

மனித எந்திரம்...!


அந்தப் பெண்மணி எனது அருமையான தோழி. இனியவர். பண்பானவர். மென்மையான பேச்சும் தன்மையான பார்வையும் அவரை ரொம்பவும் வித்தி யாசப்படுத்திக் காட்டும்.
மனித எந்திரம்...!கடல் மாதிரி பெரிய விழிகள். அடர்த்தி, நீளம் கொண்ட சாட்டைப் பின்னல், இடது மூக்கில் மின்னும் ஒற்றைக்கல் மூக்குத்தி.  நேர்த்தியான புடவையும் கற்றை மல்லிகைப் பூவும் கைவிரல் மருதாணியுமாக அவர் வந்தால் எனக்குச் சிலிர்த்துப் போகும்.
கையெடுத்து கும்பிடத்  தோன்றும். ஏதாவதொரு கோயிலில் கருவறைக்குள் உட்கார்த்தி வைத்து விடலாமா என்றும் தோன்றும். பூப்போட்டு அர்ச்சனை பண்ணவும் தோன்றும்.

ஒரு ரயில் சந்திப்பில் பூத்த தோழமை எங்களுடையது. வாசித்துக் கொண்டும் குறிப்பேட்டில் எழுதிக்கொண்டும் வந்த என்னைக் கவனித்த அவர் சின்னப் புன்னகையோடு கேட்டார்:
‘‘நீங்க எழுதுவீங்கல்ல?’’ அந்தப்பொழுதில்தான் எனது நாற்பதாவது நூல் வெளியான சமயம். ‘மன்மத எந்திரம்’ என்ற  அந்தத் தொகுப்பைத் தான் படித்ததாகச் சொல்லி, அந்தத் தொகுப்பின் நேர்த்தியை வியந்தார், அந்தப் பெண்மணி. எனக்கு மகிழ்ச்சி.
படைப்பா ளிக்கே உரிய நெகிழ்வு. அப்படியே கவிதை, கதை, புதினம் என்று பேசிப் பேசி கோயம்புத்தூரிலிருந்து சென்னை சேருவதற்குள் எங்களுக்குள் எளிமையான தோழமை உரு வாகியிருந்தது. அந்தப் பயணம் மிகவும் குறிப்பாக இந்த நொடிவரை எனக்குள் பன்னீரைத் தூவுகிறது.

அப்புறம் ஒரு முறை எனது பிறந்த நாளுக்கு வந்திருந்து வாழ்த்தி, பழங்குடி இன மக்களின் ஓவியமும் கைவேலைப்பாடும் சேர்ந்த முறம் ஒன்றைப்  பரிசளித்தார். அந்த முறம் இப்போதும் என் வீட்டு நுழைவாயிலில் எல்லோரையும் வரவேற்கும்.
அவரோடு பேசிக் கொண்டிருக்கும் நொடிகளில் எனக்கு ஒரே ஒரு வேலைதான் - கேட்டுக் கொண்டிருப்பது மட்டுமே. கொஞ்சம் தேனீர் அருந்தியபடி,  மாம்பழம் ருசித்தபடி, எனது புடவைகளை ரசித்தபடி, எனது நூலகத்தின் நூல்களின் எண்ணிக்கையும் வித்தியாசத்தையும் வியந்தபடி அவர் வளைய  வருவார். இயல்பான காற்றாக இருப்பார். பூ வாசனையாக இருப்பார். நேற்றும் இன்றும் நாளையுமாக இருப்பார்...

‘‘உங்ககிட்ட மட்டும்தான் எனக்கு இவ்ளோ பேச முடியுது. சிரிக்க முடியுது’’ என்பார் ஒரு முறை. ‘‘நீங்க என் அக்காவா இருந்திருந்தா என் கனவுகள்  எல்லாம் நிறைவேறியிருக்கும்’’ என்பார், இன்னொரு முறை. ‘‘எப்படி நீங்க கவிதை எழுதறீங்கன்னு பார்க்கணும்.
நா பக்கத்தில உட்கார்ந்து பேசினா உங்களுக்கு எழுத வருமா?’’ என்பார், பிறிதொரு முறை. ‘எந்தக் கேள்விக்கும் எனது பதில் வேண்டாம். எந்த உணர்வுக்கும் எனது எதிர்வினை வேண்டாம். எந்தவொரு கேள்விக்கும் என்னிடத்தில் பதில் இல்லை. எந்தவொரு பதிலுக்கும் என்னிடத்தில் கேள்வி இல்லை’ என்ற எனது கவிதைக்கான வெளிப்பாடு அந்தப் பெண்மணிதான்.

அவரது முள்தூவிய பாதைகள், குருதி வழியும் பாதங்கள், சிலுவை சுமக்கும் மு துகு, முள் கிரீடம் சுமக்கும் வாழ்க்கை, நெருஞ்சி முள்ளான விடியல், சுண்ணாம்புக் காளவாய் இரவு, இப்படி அவருடைய ஒவ்வொரு நொடியும் நரகம். ஆனால், அந்தப் புன்னகையை அவர் தொலைத்ததே இல்லை.
‘‘நான் ஏன் தொலைக்கணும்? எம் புன்னகைய? இந்தச் சமூகம் ஒவ்வொண்ணா, ஒவ்வொண்ணா செஞ்சு என்னை நொறுக்குது. எம் புன்னகைய  நொறுக்கிடுச்சுன்னா, நானு தோத்துட்டேன்னு அர்த்தமில்லே! நானு தோக்க மாட்டேன், தோக்கவே மாட்டேன்...’’ அந்தப் பொழுதில் மட்டும்தான் அவருடைய குரலில் காரம் தூக்கலாக இருக்கும். வெறுப்பும் ஆங்காரமும் மிகும்.

0 comments:

Post a Comment